Sunday, August 22, 2010

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas)

லாஸ் வேகஸ்

இது மண்ணில் மனிதன் நிர்மாணித்த சொர்க்கம்

அடர்ந்த பாலைவனத்திற்கு நடுவே ஒர் புதிய உலகம்

இங்கு வரும் மக்களை நேற்றைய நினைவிலிருந்தும் நாளைய கனவில் இருந்தும் மறக்கடித்து இன்றைய நினைவில் (இங்கு தங்கியிருக்கும் வரை) வாழ வைக்கும் இடம்

மதங்களால் பாவங்கள் என நிர்ணயம் செய்தவை அனைவற்றையும் மக்கள் சுதந்திரமாக செய்ய அனுமதி பெற்றுள்ள பாவ நகரம்(Sin City)

நாள் தோறும் பல கோடீஸ்வரர்களை உருவாக்கியும் அழித்து கொண்டும் இருக்கும் இடம்

உலகின் உல்லாச தலை நகரம்(Entertainment Capital od World)



அமெரிக்க மக்கள் வேலை மற்றும் குடும்ப அழுத்தங்கள் மற்றும் பிரச்சனைகளை மறந்து சில நாட்கள் முழு சந்தோசமாக கழிக்க விரும்பும் இடம் லாஸ் வேகஸ். மக்கள் மகிழ்ச்சி கொடுக்க கூடியது என்று எதை பிரதானமாக நினைக்கிறார்களோ அது அனைத்தும் இங்கு கிடைக்கும். மது, மாது,மாமிசம்,சூதாட்டம்,கலை நிகழ்ச்சிகள்,உல்லாசம் மற்றும் பிரமாண்டம் அனைத்தும் உலகளவில் அதிகம் கிடைக்கும் இடம் என்றால் லாஸ் வேகஸை கூறலாம்.



(ஈபில் கோபுர உயரத்திலிருந்து இரவு நேர வேகாஸ்)





(ஸ்டிராட்டோஸ்பியர் உயரத்திலிருந்து பகல் நேர வேகாஸ்)

இந்த நகரின் சிறப்பே இங்கு அமைந்திருக்கும் பிரமாண்டமான சூதாட்ட வசதியுடன் கூடிய ஹோட்டல்கள் தான். லாஸ் வேகஸின் முக்கிய பகுதி முக்கிய ஸ்டிரிப்(Main Strip) என்று அழைக்க படும் வீதி தான். அந்த வீதியின் இரு ஒரங்களிலும் ராட்சஸ சூதாட்ட விடுதிகள் இருக்கும்.


ஒவ்வொரு விடுதியும் தனக்கென சில சிறப்பான கலை நிகழ்ச்சிகளை கொண்டிருக்கும். கலை நிகழ்ச்சி என்பது சிறந்த இசை நிகழ்ச்சியாகவோ, நகைச்சுவை நிகழ்ச்சியாகவோ அல்லது தனி திறமைகளை காட்டும் நிகழ்ச்சியாகவோ இருக்கலாம்.புளு மேன் காட்சி,சர்க் டியூ சொலி காட்சி, லயன் கிங் காட்சி போன்றவை இங்கு பிரபலம்.


அதே போல் ஒவ்வொரு விடுதியும் எதாவது ஒரு தீம் அடிப்படையில் வடிவமைக்க பட்டிருக்கும். ஒவ்வொரு விடுதியும் பிரமாண்டத்தில் ஒன்றுக்கொன்று போட்டி போடும்.ஒவ்வொரு விடுதிக்கும் எதாவது ஒரு சிறப்பம்சம் இருக்கும்.ஒரு சில விடுதிகளை பற்றி பார்ப்போம்.





MGM விடுதி சிங்கத்திற்கு பெயர் போனது. அங்கு எப்போதும் மக்கள் பார்வைக்காக நிஜ சிங்கம் வைக்க பட்டிருக்கும்.






லக்ஸார் விடுதியின் தீம் எகிப்து. அது பிரமாண்ட பிரமீடு வடிவில் கட்டபட்டிருக்கும். அதன் மேல் அமைக்க பட்டுள்ள விளக்கு பல மைல் தூரத்திற்கு வெளிச்சம் தரும். சில வருடங்களுக்கு முன் வரை அங்கு பண்டைய எகிப்து நாகரீகத்தை விவரிக்கும் விதம் அழகிய சிலைகள் இருக்கும். ஆனால் தற்போது அவற்றில் பெருமளவு அகற்றபட்டு மக்களை கவரும் பைக் போன்றவை வைக்க பட்டுள்ளது.இங்கு மனித உடல் மற்றும் டைடானிக் கப்பலின் நிஜ பாகங்களை கொண்ட கண்காட்சி வைத்திருக்கிறார்கள்.



எக்ஸ்காலிபர் விடுதி அரண்மனை தீமை கொண்டது.



மிக பெரிய பாலைவனத்தின் நடுவே அமைந்த இந்நகரில் உள்ள மாண்டலி பே விடுதியின் தீமோ கடல்(குடா?)!.இங்கு டால்பின் கண்காட்சி, கடல் சார்ந்த உணவு பொருட்களுக்கான சிறப்பான உணவகங்கள் மற்றும் செயற்கையாக அலை எழுப்பும் அழகிய கடல் ஒன்றையும் நிர்மானித்துள்ளனர்.

மற்ற விடுதிகள் மற்றும் சூதாட்டங்களை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

2 comments:

வடுவூர் குமார் said...

அருமையான படங்களும் விளக்கங்களும்.

சதுக்க பூதம் said...

நன்றி வடுவூர் குமார்