Sunday, August 29, 2010

தர்மபுரி பஸ் எரிப்பு- அன்று கோவை பல்கலையில் நடந்த போராட்டம்


வழக்கமான நான் இடும் பதிவை விட வேறுபட்ட பதிவு இது. தர்மபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகளை அநியாயமாக உய்ரோடு கொளுத்தி எரிய செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த செய்தி. அந்த நிகழ்வு பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஆனால் அந்த நிகழ்ச்சி நடந்த அன்று கோவை வேளாண் பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திய செய்தியும் அதை எவ்வாறு நடந்தது என்பதும் ஒரு சிலருக்கே தெரிந்திருக்கும். அது பற்றி பல நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.அந்த போரட்டத்தில் பங்கு பெற்றவன் என்பதாலும் அப்போது நடந்த செய்திகள் பற்றி அனைவரும் அறிய வேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன். இது எந்த கட்சியையும் குறை கூற எழுதபட்டதல்ல. ஆனால் உண்மையில் நடந்த செய்தி

இந்த துயர செய்தி நடந்து பல காலங்கள் ஆகி விட்டதால், அன்று நடந்த ஒரு சில நிகழ்வுகள் மறந்து இருக்கவும் ஒரு சில பிழைகள் இருக்கவும் சாத்தியகூறு உள்ளது. ஆனால்
தற்காலத்தில் நடக்கும் மாணவர் போராட்டம் எவ்வாறு தலைமை, வழி நடத்தல் மற்றும் தெளிவான குறிக்கோள் இல்லாமல் நடை பெறுகிறது என்றும் எவ்வாறு அரசியல் கட்சிகள் குறுக்கிடுகின்றன என்றும் அதிகாரம் எப்படி பயன் படுத்தபடுகின்றன என்பது பற்றியும்
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவை எழுதுகிறேன்.

பிப்ரவரி 2ம் நாள் 2000ம் ஆண்டு அந்த துயர நிகழ்ச்சி நடந்த போது கோவை வேளாண் பல்கலையில் அனைத்து இளம் அறிவியற் (Bachelors) படிக்கும் மாணவர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக கல்லூரியை விட்டு வெளியே சென்றிருந்தனர். எனவே அங்கு இருந்தது
முதுகலை மாணவர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் தான்.மாணவர்கள் மத்தியில் மாபெரும் துயரமும் மறுபுறம் கொந்தளிப்பும் இருந்தது. ஏதாவது போராட வேண்டும் என்ற வெறி இருந்தது. ஆனால் இந்த கொடுஞ்செயலை நிறைவேற்றியவர்களோ அப்போதைய எதிர்
கட்சியினர். எனவே ஆளுங்கட்சி நடைவடிக்கை எடுக்க போவது நிச்சயம். அது மட்டுமன்றி போராட்டம் என்று போராடி என்ன கோரிக்கையை வைப்பது? ஆனாலும் உணர்வு ரீதியாக கொந்தளித்திருந்த மாணவர்கள் நீதி கேட்டு ஏதாவது போராட வேண்டும் என்ற வெறியில் இருந்தனர். மாணவர்கள் அனைவரும் போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள்.

ஆனால் போராட்டத்தை தலைமை ஏற்று, நூதனமான முறையில் வழி நடுத்தும் அளவிற்கு திறமை வாய்ந்த மாணவர்கள் யாரும் இல்லை. இந்த போராட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தது முழுக்க முழுக்க மாணவர்கள் தான். ஆனால் அப்போது என்ன
கோரிக்கைகளை வைப்பது என்று முடிவாக இல்லை. அந்த நேரத்தில் தான் பெரும்பாலான மாணவர்கள் அறியாமலேயே ஒரு நிகழ்வு நடந்தது. மணவர்களில் ஒரு சிலர் கம்யூனிச கட்சிகளுடன் தொடர்பு இருந்தது(அந்த மாணவர்கள் போராட்ட களத்தில் முன்னனியில் இல்லை என்பது வேறு விஷயம்). அந்த மாணவர்களுக்கு கம்யூனிச மாணவர்கள் அமைப்பிலிருந்து தொலைபேசி வந்தது. அப்போது கை தொலைபேசி எல்லாம் இல்லை. மாணவர்களை தொடர்வு கொள்ள ஒரே வழி விடுதியில் இருக்கும் பொது தொலைபேசி தான். விடுதி பொது தொலை பேசி மூலம் மாணவர்களை அவர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால் விடுதி தொலைபேசி முழுவது அரசாங்கத்தால் ஒட்டு கேட்க பட்டது அவர்களுக்கு அப்போது தெரியாது.

அப்போது கம்யூனிஸ்டு கட்சி அ.தி.மு.க வுனருடன் கூட்டில் இருந்தனர். அது மட்டுமன்றி தமிழக சட்டமன்றத்திற்கான இடை தேர்தல் அப்போது நடை பெற இருந்த சமயம். தர்மபுரி சம்பவத்தால் மக்களிடம் அதிமுக எதிர்ப்பு அலை பரவ தொடங்கி இருந்தது. அந்த எதிர்ப்பு அலையை எப்படியாவது தணிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர் எதிர்கட்சி கூட்டணியினர். அதனால் மிக பெரிய அளவில் மாணவர்கள் போராட்டத்தை நடத்துவதன் மூலம் இந்த எதிர்ப்பு அலையை ஆளும் கட்சிக்கு எதிராக திருப்பியோ அல்லது
இடைதேர்தலை சிறிது காலம் தள்ளி போடவைப்பதோ அவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்தது.மேலும் பஸ் எரிப்பு விசாரனையை CBI வசம் ஒப்ப்டைக்க வேண்டும் போன்ற கோரிகைகளும் இருந்தது. ஆனால் கம்யூனிஸ்டுகள் மாணவர்களிடையே தொடர்பு
கொண்ட செய்தியை அறிந்தவுடன் ஆளும் அரசு தரப்பினர் உஷாராக ஆகினர். அது மட்டுமன்றி மாணவர் போராட்டமே எதிர் கட்சியினரின் தூண்டுதல் பேரில் தான் நடக்க உள்ளதோ என்ற சந்தேகம் ஆளும் தரப்பினரிடம் பரவ தொடங்கியது.

வழக்கமான மாணவர் போராட்டங்கள் எதிர் நோக்கும் அத்தனை பிரச்சனைகளையும் இந்த போராட்டம் எதிர் கொண்டது. கல்லூரிக்கு கால வரையற்ற விடுமுறை விட்டு கல்லூரி விடுதியிலுருந்து வலுகட்டாயாமாக மாணவர்கள் வெளியேற்ற பட்டனர்.உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகள் கூட மறுக்க பட்டன. (அப்போதைய விடுதி வார்டன் மிகவும் நல்ல மனிதர் என்பதால் சில உதவிகளை செய்தார்) அப்போது போராட்டத்தில் ஈடுபட்டது முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என்பதால் அவர்களுடைய ஆராய்ச்சிக்கு பொறுப்பான ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க பட்டு போராட்டத்தை கைவிட அறிவுருத்தபட்டனர்.கல்லூரி எங்கும் போலீஸ்
குவிக்க பட்டு தீயணைப்பு வண்டி என அனைத்தும் கல்லூரியை சுற்றி நிறுத்த பட்டது.பல்கலையின் கதவுகள் அனைத்தும் மூட பட்டு அதை சுற்றியும் பல்லாயிரகணக்கான போலீசார் குவிக்க பட்டனர். வெளியிலிருந்து எந்த மாணவர்களோ அல்லது பொது மக்களோ
பல்கலை கழகத்தின் உள்வர தடை விதிக்க பட்டது பல்கலை கழகம் இருந்த தெருவே போலிசாரால் மறிக்க பட்டது. இதன் மூலம் பிற கல்லூரி மாணவர்களோ அல்லது மாணவர் அமைப்புகளோ போராடத்தில் ஈடுபடும் மாணவர்களை தொடர்பு கொள்வது தடுக்க பட்டது.கல்லூரி எங்கிலும் ஒரு சில புது முகங்கள் உலவ ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் உளவு துறையை சேர்ந்தவர்கள். மாணவர்கள் அவர்களை ஒவ்வொருவராக விரட்டி அடித்து கொண்டு இருந்தார்கள்

இனி மாணவர்கள் பக்கம் வருவோம். போராட்டம் ஆரம்பித்தாகி விட்டது. இனி கோரிக்கைகளை தொகுக்க வேண்டுமே. போராட்டத்திற்கான கோரிக்கைகள் பற்றி மாணவர்களிடையே விவாதிக்க பட்டது. ஒரு புறம் மாணவர்கள்(முக்கியமாக மாணவிகள்) உணர்ச்சி வசத்தில் இருந்தனர். மறுபுறம் எதிர்கட்சி சார்பு கொண்ட மாணவர்களோ மாணவர்களின் இந்த மனநிலையை நன்கு பயன் படுத்த தொடங்கினர். ஒரு சிலர் இடை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றனர். ஒரு மாணவர் முதல்வர் நேராக கோவை பல்கலை கழகத்திற்கு வந்து போராட்ட மாணவர்களிடம் நேரிடையாக பேச வேண்டும் என்றார். (அப்போது முதல்வன் திரைப்டம் வந்த சமயம் என்று நினைக்கிறேன்). அது நடக்கும் விஷயமா என்று ஒரு சிலர் கேட்டவுடன், கட்சி காரர்களின் திருமண விழாவுக்கு வரும் முதல்வர் இதற்கு ஏன் வர கூடாது? என்றார். பிறகு அது போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக வைக்க பட்டது. முதல்வர் வந்து நேரிடையாக பேசும் வரை போராட வேண்டும் என்று கோரினர்.இறந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும், இந்த பிரச்ச்னையை தேர்தலுக்கு பயன் படுத்த கூடாது(அவ்வாறு பயன் படுத்தினால் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் யாராவது மாணவர்களை கொன்று பிரச்ச்னையாக்க முயல்வார்கள் என்ற சந்தேகத்தால்), மாணவர்கள் மேல் தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகள் மேல் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் வேண்டும், நடு நிலையான விசாரணை வேண்டும் என்று பல கோரிக்கைகள் வைக்க பட்டன.அது தவிர பலகலை கழகம் சார்ந்த பொதுவான கோரிக்கைகளும் இருந்தது. முதல்வர் நேரில் வர வேண்டும் என்பது தவிர மற்ற கோரிக்கைகள் பற்றி அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே இருந்தனர்.

ஆனால் முதல்வர் நேரில் வர வேண்டும் என்ற கோரிக்கையால் போராட்டம் இழுத்து கொண்டே சென்றது. அப்போது த.மா.க மற்றும் பிற கட்சியினரும் இதை பயன் படுத்த முனைந்தனர். த.மா.கவின் உள்ளூர் தலைவர் மூலம் மாணவர்கள் ஆமோதித்தால் மூப்பனார் உடனடியாக மாணவர்களை சந்திக்க வர தயாராயிருப்பதாக் தெரிவிக்க பட்டது. மாணவர்கள் இதை ஒட்டு மொத்தமாக நிராகரித்தனர். அது மட்டுமன்றி ஒரு சில உள்ளுர் வாரிசு அரசியல்வாதிகள் இப்பிரச்ச்னைக்குள் நுழைந்து சமரசம் செய்து தன் நிலையை உயர்த்தி கொள்ள பார்த்தனர். ஆனால் மணவர்கள் அதற்கும் ஒத்து கொள்ளவில்லை.

அப்போதைய துணைவேந்தர் கண்ணையன் பிரச்ச்னையை தீர்க்க கடுமையாக முயற்சி செய்தாலும், அவர் சசிகலா சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆளும் கட்சிக்கு அவர் மேலும் சிறிய சந்தேகம் இருந்ததாக தெரிகிறது.அப்போது தீவிரமாக போரட வேண்டும் என்பதில் மாணவர்களை விட மாணவிகள் தீவிரமாக இருந்தனர்.போராட்டம் அப்படியே சென்று கொண்டு இருந்த போது கடைசியாக மாணவர்களில் ஒரு 10 பேரை தேர்ந்து எடுத்து அவர்கள் துணைவேந்தரிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.துணைவேந்தருடனான பேச்சு வார்த்தைக்கு பிறகு அந்த மாணவர்கள் குழு சனி ஞாயிறு விடுமுறைக்கு பின் முதல்வரை சென்னை கோட்டையில் சந்திப்பது என முடிவானது.பிறகு தான் பிரச்சனைகள் பின் புறமாக வர தொடங்கின. முதல்வரை சந்திக்க சென்ற 10 மாணவர்கள் வீட்டு விலாசமும் காவல் துறையினரால் சேகரிக்க பட்டு அனைவரின் வீட்டுக்கும் போலீசார் நேரிடையாக சென்றனர். மாணவர்களின் பெற்றோரிடம் போலீசார் நேரிடையாக அழுத்தம் கொடுக்க தொடங்கினர். போராட்டத்தை உடனடியாக முடிக்கவில்லை என்றால் ஏற்பட போகும் பின் விளைவுகளை(மிரட்டல்?) அவர்களிடம் சொன்னார்கள். அதன் விளைவு பெரும்பாலான பெற்றோர்கள் உடனடியாக கோவை கல்லூரி விடுதிக்கே வந்து மாணவர்கள் போராட்டத்தை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க சொல்லி வற்புறுத்தினார்கள்.

பிறகு மாணவர்கள் குழு தனி வேனில் சென்னை நோக்கி சென்றது. முன்புறம் பின் புறம் காவல் துறை பாதுகாப்பு வாகனங்களோடு வேறு யாரும் மாணவர்களை இடையில் சந்திக்காத படி வாகனம் சென்னை சென்றது. பேச்சி வார்த்தையின் போது மாணவர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்று கொள்ளபட்டன அல்லது பரிசீலனை செய்வதாக ஒத்து கொள்ள பட்டன. மாணவர்கள் இந்த பிரச்சனையை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன் படுத்த கூடாது என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்த போது அவர் கூறியது-

நாங்கள் சாதனைகளை சொல்லி தான் ஓட்டு வாங்குவோமே தவிர
வேதனைகளை சொல்லி ஓட்டு வாங்க மாட்டோம்

இறந்த மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுப்பதாக கூறிய அரசு அதை நிறைவேற்றவும் செய்தது.

இந்த சம்பவத்திலேயே மிகவும் சோகமான செய்திகள் சில.

தர்மபுரியில் பஸ்ஸில் மாணவிகள் எரிந்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த பொது மக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர , யாருமே காப்பாற்ற முன்வரவே இல்லை. மனித நேயம் எங்கு போனது என்றே தெரியவில்லை.

மேலும் இந்த நிகழ்ச்சியை மூவர் இறந்த செய்தியாகவே பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அந்த பஸ்ஸில் இருந்த அனைத்து மாணவிகளையும் முழுவதுமாக எரிப்பதே இந்த செயலை நடத்தியவர்களின் நோக்கம். பஸ்ஸில் பின் புறம் முழுவதும் மாணவிகளின் பெட்டிகள் இருந்ததால் பின் புற கதவை திறக்க வழியே இல்லை. வன்முறை கும்பலோ பஸ்ஸின் முன் வாசம் முழுவதும் பெட்ரோலை ஊற்றி எறிய விட்டு விட்டதால் முன் வாசல் வழியேயும் தப்ப வழி இல்லை. அப்போது அடுத்த பஸ்ஸில் இருந்த வேளாண் கல்லூரி மாணவர்களின் துணிச்ச்லான முயற்சியால் தான் மற்ற மாணவிகளை காப்பாற்ற முடிந்தது. பின் கதவின் கண்ணாடியை உடைக்க கூட அப்பகுதி பொது மக்களிடமிருந்து அவர்களுக்க உதவி கிடைக்க வில்லை.அந்த மாணவர்களின் துணிச்சலையும் முயற்சியையும் அளவிடவே முடியாது.

பேருந்தில் தர்மபுரி அருகே சென்று கொண்டு இருந்த போது ஜெயலலிதாவின் கோர்ட் தீர்ப்பு பிரச்சனை பற்றி தெரிந்தவுடன் அந்த வாகன ஓட்டுனர் பாதுகாப்பான பகுதியில் நிறுத்த வேண்டும் என்பதால் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் நிறுத்தினார்.கலெக்டர்
அலுவலகம் அருகில் பஸ் நிறுத்தினாலும் பஸ் முழுமையாக கருகி எரியும் வரை தீயணைப்பு வண்டி அங்கு வரவே இல்லை.

கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களை ஒரு பஸ்ஸிலும் மாணவிகளை ஒரு பஸ்ஸிலும் அமர்த்தி அழைத்து சென்றுள்ளனர். மாணவர்களுக்கு உள்ள maturityகூட ஆசிரியர்களுக்கு இல்லாதது கொடுமை. மாணவ மாணவிகள் என்று பிரிக்காமல் பேட்ச் வாரியாக பிரித்து
இருந்தால் அந்த பஸ்ஸின் உள் இருந்திருக்க கூடிய மாணவிகளை மாணவர்கள் நிச்சயம் முழுமையாக காப்பாற்றி இருப்பார்கள்.

அப்போது போலீசார் நடந்து கொண்ட விதம் கொடுமையிலும் கொடுமை.கதறிய வேளாண் கல்லூரி மாணவர்களை மிரட்டிய சம்பவம் கூட நடந்துள்ளது.
அந்த மாணவர்கள் கூறிய ஒரு சில போலீஸ் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கபட்டது. ஆனால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தனரா என்று தெரியவில்லை.


கோர்ட்டில் வன்முறை கும்பலின் பலவகை மிரட்டலையும் மீறி தைரியமாக சாட்சி சொன்ன பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் நெஞ்சுரம் அதசயிக்க தக்கது.

அதன் பிறகு இறந்த குடும்பத்தினரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல பல்கலை கழகம் சார்பில் சென்ற குழுவில் நாமக்கல்லை சேர்ந்த மாணவியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். தன் மகளை எறியும் தீயில் இழந்த அந்த குடும்பத்தினரின் கதறல் மிகவும் கொடுமையாக இருந்தது.

இந்த போராட்டத்தின் விளைவாக முதல்வருக்கு கோவை வேளாண் பல்கலை கழகம் மேல் ஏற்பட்ட கோபத்தை தவிர்க்க, புதிதாக கட்டபட்ட பட்டமளிப்பு விழா கட்டிடத்துக்கு "கலைஞர் அரங்கம்" என்று பெயர் வைக்க பட்டது. கோவை வேளாண் பல்கலைகழகத்தின்
மேல் ஜெயலலிதாவுக்கு இருந்த கோபத்தை அகற்ற மகராசி சிலை( மக - ராசி- ஜெயலலிதா மக ராசியை சேர்ந்தவர்) வைக்க பட்டது.

இந்த பதிவை எழுதி முடிக்கும் போது அந்த கொடும்பாவிகளுக்கான தூக்கு தண்டனை உறுதி செய்யபட்ட செய்தி வந்துள்ளது. நீதி இன்னும் இந்தியாவில் முழுமையாக சாகவில்லை!

--

Wednesday, August 25, 2010

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas) 2

பல பெரிய சூதாட்ட விடுதிகள் நகரத்தை 'Theme' ஆக கொண்டன. உதாரணமாக நியூயார்க் விடுதியின் வெளியே பெரிய சுதந்திர தேவியின் சிலையும், புரூக்ளீன் பாலத்தின் அமைப்பும் இருக்கும். இந்த விடுதியை சுற்றி அமைக்க பட்டுள்ள சாகச ரயிலில் (Train Ride) பயணிப்பபவர்களை பார்த்தாலே அடி வயிறு கலக்கும்.



பாரீஸ் விடுதி ஈபில் கோபுரத்துடன் வடிவமைக்க பட்டுள்ளது. அங்கு பணம் செலுத்தி கோபுரத்தின் உயரத்திற்கு சென்று வேகாஸின் அழகை கண்டுகளிக்களாம்.



வெனிஸ், பாரிஸ் போன்ற விடுதிகளின் உள்ளமைப்பு அந்நகரங்களின் தெருக்களை போலவே வடிவமைக்க பட்டுள்ளதால் அந்த நகரங்களிலே இருப்பது போன்ற உணர்வு உண்டாகும். வெனிஸ் விடுதியில் உண்மையான வெனிஸில் இருப்பது போல் படகு சவாரியும் உண்டு.அந்த விடுதிகளின் உள் வேலைபாடுகளும் மிகுந்த கலை நுணுக்கத்துடன் காணபடும்.



பெலாஜியோ விடுதி நீறூற்றும் மிராஜ் விடுதி எரிமலையும் காண்பவர்களை திகைக்க வைப்பவை. முக்கியமாக பெலாஜியோ நீறூற்றை ஈபில் கோபுர உயரத்திலிருந்து பார்த்தால் மிக அழகாக இருக்கும்.



அது தவிர சர்க்கஸ் சர்க்கஸ் போன்ற பெரிய விடுதிகளும் உள்ளன. கடைசியாக உள்ள விடுதி ஸ்டேரேட்டோஸ்பியர். இதை ஸ்டிரேட்டோ 'FEAR' என்றே கூறலாம். கோபுர வடிவில் உள்ள இந்த விடுதியின் 103ம் மாடிக்கு(1149 அடி உயரம்) சென்று வெளியே பார்த்தால் ஒட்டு மொத்த லாஸ்வேகாஸும் தெரியும். அங்கு இருக்கும் ரைடுகள் தான் மிகவும் மயிர் கூச்செரிக்க வைப்பவை. எத்தனையோ ராட்டினம் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கு உள்ள ராட்டினமோ கட்டிடத்தை விட்டு வெளியே வந்து அதல பாதாளத்தை பார்க்க வத்து சுழல கூடியவை.



அதே போல் இங்கு உள்ள கார் ரைடு 1159 அடி உயரத்தில் பூமியை பார்ப்பது போல் சிறிது தூரம் கீழாக பயனித்து , அந்த உயரத்தில் கீழி நோக்கி காட்டிய படி சிறிது நேரம் வைத்திருக்கும்.



அது போல் மற்றொன்றில் கண்ணாடி லிப்டில் இருந்தவாறு அந்த உயரத்தில் மிக வேகமாக மேலும் கீழும் செல்லும். தற்போது புதிதாக ஒரு ரைடு வந்துள்ளது. அதன் படி மக்களை ஒரு கொக்கியில் கட்டிவிட்டு கயிறு கட்டி 1000 அடி உயரத்திலிருந்து தள்ளி விட்டு விடுவார்கள்! லாஸ் வேகாஸ் நகரின் நகர் பகுதியான 'Freemont Street' ல் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். அங்கு தெருவில் நடக்கும் ஒலி-ஒளி காட்சி பிரசித்தி பெற்றது.



லாஸ் வேகாஸ் அருகில் உள்ள பகுதிகள் என்று பார்த்தால் கீழ்கண்டவற்றை சொல்லலாம்.

1.ஈதல் சாக்லேட் பாக்டரியில் சாக்லேட் செய்வதை நேரடியாக பார்க்கலாம்.



2. ஹூவர் அணைக்கட்டு 1 மணி நேர பயணத்தில் உள்ளது.



3. அங்கிருந்து கிராண்ட் கென்யான் செல்லலாம். கிராண்ட் கென்யானின் Sky Walk ம் மேற்கு பகுதியும் அருகாமையில் உள்ளது. தெற்கு பகுதியை சென்றடைய நிறைய நேரம் பயணிக்க வேண்டும். ஆனால் அங்கிருந்து தான் கிராண்ட் கென்யானின் உண்மையான அழகை கண்டு களிக்கலாம். Sky Walk என்ற பகுதியில் கிராண்ட் கென்யான் பள்ளதாக்கின் ஆழமான பகுதியில் கண்ணாடியாலான ஒரு நடை பாதையை அதள பாதாளத்தின் மேல் கட்டி உள்ளனர். அங்கிருந்து கீழே பார்த்தால் ????







இந்த புகைபடத்தை பார்த்தால் ஜீன்ஸ் படத்தின் "எனக்கே எனக்கா" பாட்டு ஜாபகம் வருகிறதா?

அடுத்த பகுதியில் லாஸ் வேகாஸின் 'Trade Mark'குகளான சூதாட்டம்,மது,மாது மற்றும் மாமிசம் பற்றி பார்ப்போம்

--

Monday, August 23, 2010

அமெரிக்க அரசின் தங்கத்திற்கு எதிரான போர் ஆரம்பம்?

அமெரிக்க அரசு தனது மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செலவீனங்களை சரி கட்ட புதிய சட்டத்தை(Health Care Reform Act of 2010,-Section 9006) அறிமுக படுத்தி உள்ளது. அந்த புதிய சட்டத்தின் படி $600க்கும் மேல் பொருட்களை விற்றால் முக்கியமாக தங்கம் மற்றும் வெள்ளியை விற்றால் அதனை வாங்குபவர்கள் அமெரிக்க அரசின் வருமான வரி துறையினரிடம் 2012 முதல் IRS க்கு form 1099 மூலம் அந்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் வரி ஏய்ப்பு தடுக்க பட்டு அரசுக்கு $18 பில்லியன் டாலர் வரை வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்க பட்டுள்ளது.இதில் என்ன Conspiracy Theory என்று நினைக்கிறீர்களா?ஆது பற்றி அறிய பொருளாதாரத்தையும், சரித்திரத்தையும் சிறிது பின் சென்று பார்ப்போம்.

1500க்களில் இங்கிலாந்தில் வாழ்ந்த கிரஷாம் என்பவரின் கூற்று படி
"Bad money drives out good if their exchange rate is set by law."

அதாவது இரண்டு வகையான பணங்கள் நாட்டில் புழக்கத்தில் இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அதில் ஒரு பணத்தின் உலோக மதிப்பு அதிகமாகவும் மறு பணத்தின் உலோக மதிப்பை அரசு குறைத்து வெளியிடுகிறது என்றால், அதாவது இரு வேறு நாணயங்களில் 25 பைசாவில் 10கிராம் உலோகம்(உதாரணமாக தாமிரம்) இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அரசுக்கு அதிக அளவு பணம் தேவை தேவை படுவதால் ஒரு நாணயத்தில் 25 பைசாவில் 5 கிராம் மட்டும் உலோகம் வைத்து வெளியிட தொடங்கினால் மக்கள் குறைவாக உலோகம் உள்ள நாணயத்தை முடிந்த அளவு செலவு செய்து அதிக உலோகம் உள்ள முதல் நாணயத்தை சேமித்து வைக்க ஆரம்பிப்பார்கள். நாளாக நாளாக, வியாபாரிகள் முதல் நாணயத்தை கேட்க தொடங்குவார்கள். அதன் விளைவு முதல் நாணயத்தின் மதிப்பு மேலும் அதிகமாக, உலோக மதிப்பு குறைந்த இரண்டாம் நாணயத்தின் மதிப்பு மேலும் குறையும்.இதனை கிரஷாம் விதி என்பார்கள்.


இந்த விதி இரு உலோக அடிப்படையில் உள்ள நாணயத்தை பற்றியது என்றாலும், தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட கூடியது.1930க்களில் அமெரிக்க அரசு தேவைக்காக அதிக அளவு பணத்தை அச்சடிக்க ஆரம்பித்தது. அது வரை முழுமையாக, டாலருக்கு இணையான தங்கத்தை அரசு திரும்பி தரும் நிலையில் இருந்தது. ஆனால் அரசின் பண உற்பத்தியை கண்டு சந்தேகமடைந்த மக்கள் மிக பெறிய பண வீக்கம் அடைந்து பணத்தின் மதிப்பு குறையும் என்ற சந்தேகத்தில் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்தார்கள். பொதுவாக தங்கத்தை பணவீக்கத்திலிருந்து தங்களை பாதுகாக்கும் காரணியாக (Hedge against Inflation)மக்கள் நினைப்பது வழக்கம்.டாலருக்கு இணையாக தங்கமும் ஒரு சேமிப்பு மற்றும் பண்ட மாற்று சக்தியாக வளர்வதை கண்ட அன்றைய அமெரிக்க பிரதமர் ரூஸ்வெல்ட் , மக்கள் வைத்திருக்கும் தங்கம் அனைத்தையும் அன்றைய மார்கெட் மதிப்புக்கு பணம் கொடுத்து பறிமுதல் செய்ய தொடங்கினார். மக்கள் தங்கத்தை வைத்திருந்தால் அதை குற்றமாக அறிவித்தார்.

தற்போதைய நிதி நெறுக்கடி மற்றும் தொடர்ச்சியான போரின் காரணமாக அமெரிக்க அரசு மற்றும் வங்கிகளின் பண நெறுக்கடி அதிகமானதால் பல ட்ரில்லியன் டாலர்களை சிறிது சிறிதாக அமெரிக்கா மற்றும் உலக பொருளாதாரத்தில் கலக்க தொடங்கி உள்ளது. இது இன்னும் சில ஆண்டுகளில் Fractional Reserve System மூலம் மிக அதிகமான பண புழக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.இந்த சூழ்நிலையை கிரஷாம் விதியுடன் தொடர்பு செய்து பாருங்கள்.முன்பு சொன்னது போல் மதிப்பு மிக்க முதல் நாணயமாக தங்கத்தையும், மதிப்பு இழந்து கொண்டிருக்கும் இரண்டாம் நாணயமாக பணமும் இருப்பாதாக பாருங்கள்.

இனி அமெரிக்க அரசின் Health Care Reform Act of 2010,-Section 9006 சட்டத்திற்கு வருவோம். மேற் சொன்ன சட்டம் மூலம் அரசுக்கு தங்க விற்பனை பற்றிய அனைத்து செய்தியும் முழுமையாக போய்விடும். யார் யாரிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பதையும் கண்டறிந்து விடலாம். மேலும் பிற்காலத்தில் தங்க விற்பனையை தனிமை படுத்தி அதற்கு மிக அதிகமான வரியை விதித்து, சாதாரண மக்களிடமிருந்து தங்க சேமிப்பை அன்னிய படுத்த முயலலாம். நிலமை மோசமானால் ரூஸ்வெல்ட் செய்தது போல் ஒட்டு மொத்த தங்கத்தையும் மக்களிடமிருந்து பறிமுதல் செய்து விட்டு, அரசு அடிக்கும் பணத்திற்கு மாற்றாக எதுவுமே இல்லாமல் செய்யலாம்.

ஆனால் தங்கத்துக்கு ஆதரவான பொருளியல் வல்லுனர்கள், தங்கம் என்பது பல நூற்றாண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பெற்ற சேமிப்பு செல்வமாக உள்ளது. தங்கத்தை அழிக்க முயன்றவர்கள் யாருமே வெற்றி பெற்றதில்லை என்கிறார்கள்.

இதையடுத்த அமெரிக்காவில் தங்கத்தை சேமித்து வைத்துள்ள நிறுவனங்கள் , தங்கத்தை அய்ரோப்பிய வங்கிகளுக்க மாற்ற முயல தொடங்கி விட்டதாக செய்திகள் வர தொடங்கியுள்ளன.

தங்கத்தின் மதிப்பு எவ்வாறு இருக்கும் எனபதை Supply angleலிருந்து பிறிதொரு பதிவில் காண்போம்

--

Sunday, August 22, 2010

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas)

லாஸ் வேகஸ்

இது மண்ணில் மனிதன் நிர்மாணித்த சொர்க்கம்

அடர்ந்த பாலைவனத்திற்கு நடுவே ஒர் புதிய உலகம்

இங்கு வரும் மக்களை நேற்றைய நினைவிலிருந்தும் நாளைய கனவில் இருந்தும் மறக்கடித்து இன்றைய நினைவில் (இங்கு தங்கியிருக்கும் வரை) வாழ வைக்கும் இடம்

மதங்களால் பாவங்கள் என நிர்ணயம் செய்தவை அனைவற்றையும் மக்கள் சுதந்திரமாக செய்ய அனுமதி பெற்றுள்ள பாவ நகரம்(Sin City)

நாள் தோறும் பல கோடீஸ்வரர்களை உருவாக்கியும் அழித்து கொண்டும் இருக்கும் இடம்

உலகின் உல்லாச தலை நகரம்(Entertainment Capital od World)



அமெரிக்க மக்கள் வேலை மற்றும் குடும்ப அழுத்தங்கள் மற்றும் பிரச்சனைகளை மறந்து சில நாட்கள் முழு சந்தோசமாக கழிக்க விரும்பும் இடம் லாஸ் வேகஸ். மக்கள் மகிழ்ச்சி கொடுக்க கூடியது என்று எதை பிரதானமாக நினைக்கிறார்களோ அது அனைத்தும் இங்கு கிடைக்கும். மது, மாது,மாமிசம்,சூதாட்டம்,கலை நிகழ்ச்சிகள்,உல்லாசம் மற்றும் பிரமாண்டம் அனைத்தும் உலகளவில் அதிகம் கிடைக்கும் இடம் என்றால் லாஸ் வேகஸை கூறலாம்.



(ஈபில் கோபுர உயரத்திலிருந்து இரவு நேர வேகாஸ்)





(ஸ்டிராட்டோஸ்பியர் உயரத்திலிருந்து பகல் நேர வேகாஸ்)

இந்த நகரின் சிறப்பே இங்கு அமைந்திருக்கும் பிரமாண்டமான சூதாட்ட வசதியுடன் கூடிய ஹோட்டல்கள் தான். லாஸ் வேகஸின் முக்கிய பகுதி முக்கிய ஸ்டிரிப்(Main Strip) என்று அழைக்க படும் வீதி தான். அந்த வீதியின் இரு ஒரங்களிலும் ராட்சஸ சூதாட்ட விடுதிகள் இருக்கும்.


ஒவ்வொரு விடுதியும் தனக்கென சில சிறப்பான கலை நிகழ்ச்சிகளை கொண்டிருக்கும். கலை நிகழ்ச்சி என்பது சிறந்த இசை நிகழ்ச்சியாகவோ, நகைச்சுவை நிகழ்ச்சியாகவோ அல்லது தனி திறமைகளை காட்டும் நிகழ்ச்சியாகவோ இருக்கலாம்.புளு மேன் காட்சி,சர்க் டியூ சொலி காட்சி, லயன் கிங் காட்சி போன்றவை இங்கு பிரபலம்.


அதே போல் ஒவ்வொரு விடுதியும் எதாவது ஒரு தீம் அடிப்படையில் வடிவமைக்க பட்டிருக்கும். ஒவ்வொரு விடுதியும் பிரமாண்டத்தில் ஒன்றுக்கொன்று போட்டி போடும்.ஒவ்வொரு விடுதிக்கும் எதாவது ஒரு சிறப்பம்சம் இருக்கும்.ஒரு சில விடுதிகளை பற்றி பார்ப்போம்.





MGM விடுதி சிங்கத்திற்கு பெயர் போனது. அங்கு எப்போதும் மக்கள் பார்வைக்காக நிஜ சிங்கம் வைக்க பட்டிருக்கும்.






லக்ஸார் விடுதியின் தீம் எகிப்து. அது பிரமாண்ட பிரமீடு வடிவில் கட்டபட்டிருக்கும். அதன் மேல் அமைக்க பட்டுள்ள விளக்கு பல மைல் தூரத்திற்கு வெளிச்சம் தரும். சில வருடங்களுக்கு முன் வரை அங்கு பண்டைய எகிப்து நாகரீகத்தை விவரிக்கும் விதம் அழகிய சிலைகள் இருக்கும். ஆனால் தற்போது அவற்றில் பெருமளவு அகற்றபட்டு மக்களை கவரும் பைக் போன்றவை வைக்க பட்டுள்ளது.இங்கு மனித உடல் மற்றும் டைடானிக் கப்பலின் நிஜ பாகங்களை கொண்ட கண்காட்சி வைத்திருக்கிறார்கள்.



எக்ஸ்காலிபர் விடுதி அரண்மனை தீமை கொண்டது.



மிக பெரிய பாலைவனத்தின் நடுவே அமைந்த இந்நகரில் உள்ள மாண்டலி பே விடுதியின் தீமோ கடல்(குடா?)!.இங்கு டால்பின் கண்காட்சி, கடல் சார்ந்த உணவு பொருட்களுக்கான சிறப்பான உணவகங்கள் மற்றும் செயற்கையாக அலை எழுப்பும் அழகிய கடல் ஒன்றையும் நிர்மானித்துள்ளனர்.

மற்ற விடுதிகள் மற்றும் சூதாட்டங்களை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

Thursday, August 19, 2010

இன்றைய உலக பொருளாதாரம் - ஒரே நிமிடத்தில் விளக்கம்

இன்றைய உலக பொருளாதாரத்தின் போக்கை புரிந்து கொள்ள "The International" என்ற படத்தில் வந்த இந்த ஒரு கிளிப்பிங் போதுமானது. அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் The International.






இது அமெரிக்காவின் Federal Reserve கடனுக்கும் பொருந்துமா?

ஒரு சிறிய விளக்கம்

"The International" என்ற படம் தற்போதைய பன்னாட்டு நிதி நிறுவனக்கள் எப்படி செயல் படுகிறது என்பது பற்றியது. அவர்களிடம் உள்ள மித மிஞ்சிய அதிகாரம் மற்றும் பணம் கொண்டு உலகளவில் எவ்வாறு சட்டத்துக்கு புறம்பான செயல்களை(ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல்) கொண்டு உலகெங்கிலும் அமைதியின்மை, போர் மற்றும் கலவரம் ஏற்படுத்தி அதில் காசு பார்க்கும் விதம் பற்றியதுமானது கதை.

ஆனால் நான் இந்த பதிவில் போட்டதிற்கு முக்கிய காரணம் வளரும் மற்றும் ஏழை நாடுகளின் கடனுக்கும் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும் இடைபட்ட தொடர்பை பற்றி இது கூறுவதால் தான்.

எந்த ஒரு நாட்டையும் அடிபணிய வைத்து அவர்களிடமிருந்து செல்வத்தை அட்டையாக உரிய முக்கிய வழி அவர்கள் மீது போர் தொடுத்து ஆக்கிரமிப்பு செய்வதோ அல்லது பிற வழிகளோ இல்லை. அவர்களை மிக நெடிய கடன் வலையில் வீழ வைத்தால் அந்த நாடுகளின் முடிவெடுக்கும் அதிகாரம் கடன் கொடுத்தவர்கள் கைக்கு சென்றுவிடும்.

உதாரணமாக 1970க்கு பிறகு அமெரிக்க அரசு செயற்கையாக ஏற்படுத்திய எண்ணை விலை உயர்வால் உலகின் பெரும்பான்மையான நாடுகள் தங்கள் Sovereignty ஐ இழந்து விட்டனர்(இந்தியா உட்பட). அதன் தொடர்ச்சியாக ஈராக் போர்,ஆப்கான் போர் என நடத்தி தீவாரவாதத்தை பெருக்கி உலகெங்கிலும் ஒரு பாதுகாபற்ற நிலை உருவாக்கி வரவுக்கு மீறிய ராணுவ செலவீனங்களை ஏழை நாடுகள் மீது திணித்து அவர்களை மாபெரும் கடனாளி ஆக்கி, உலக நிதி நிறுவனங்களின் கட்டுபாட்டிற்கு அவர்களை தள்ளி செல்கின்றனர்.


இதன் அடிபடையில் தான் இந்த படத்தில் நாடுகளை கட்டு படுத்த எளிய வழி அவர்களை கடனாளிகளாக ஆக்குவது தான் என்கிறது.


--

Sunday, August 15, 2010

கிழக்கிந்திய கம்பெனி 5 - கொள்ளை போன செல்வங்கள்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்

கிழக்கிந்திய கம்பெனி 4 - இந்தியாவின் நெசவு தொழில் - வளர்ச்சியும் வீழ்ச்சியும்


1700ம் ஆண்டு இங்கிலாந்தின் GDP உலக GDPல் 2.8% ஆக இருந்தது. இந்தியாவின் GDP 25% ஆக இருந்தது. ஆனால் அதுவே 1850 ம் ஆண்டு இங்கிலாந்தின் GDP 9% ஆக உயர்ந்தும் ஆகவும் இந்தியாவின் GDP 12% ஆக தேய்ந்தும் போனது. இந்த அதிசயம் எப்படி நடந்து என்று பார்ப்போம்.

1600 லிருந்து 1800 வரை ஐரோப்பாவிற்கு வரும் வெள்ளியில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிலிருந்து நெசவு,வாசனை மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்ய செலவிடபட்டது. மேலும் அந்த கால கட்டத்தில் உலக உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியில் 25% இந்தியா வசம் இருத்தது. அப்போதைய வியாபாரத்தால் கி.இ.கம்பெனிக்கு நல்ல லாபம் கிடைத்தாலும் இங்கிலாந்து நாட்டிற்கு பெரும் பின்னடைவாக இருந்தது.

அப்போதுதான் கி.இ.கம்பெனிக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. மொகலாய பேரரசு சிறிது சிறிதாக பலமிழக்க தொடங்கியது. இந்தியாவின் பல பகுதிகளில் ஆட்சியாளர்கள் சிறிய சிறிய மாகாணங்களை ஆள தொடங்கினர். மேலும் அவர்களுக்குள் பங்காளி சண்டை பெரிய அளவில் நடை பெற்றது. இதை கி.இ.கம்பெனி நன்கு பயன் படுத்த தொடங்கியது. ராணுவ பலம் மூலம் நாடெங்கிலும் தன் கட்டுபாட்டில் உள்ள பொம்மை அரசாங்கங்களை வைக்க தொடங்கியது.அவர்களிடமிருந்து பெருமளவு கம்பெனியும், கம்பெனியில் வேலை செய்யும் அதிகாரிகளும் பணம் கறந்தனர்.உதாரணமாக பிளாசி போரின் வெற்றிக்கு பிறகு, மீர் ஜபார் என்னும் பொம்மை ஆட்சியாளரை வங்காள மற்றும் வட இந்திய ஆட்சியில் அமர்த்தி அவரிடமிருந்து சுமார் 37.7 லட்சம் பவுண்டுகளை போருக்கு செலவாக பெற்றனர்.இது தற்போதைய மதிப்பில் டிரில்லியன்களை தாண்டும்.அதன் பிறகு அவர் டச்சு காரர்களுடன் சேர்ந்து கி.இ.கம்பெனிக்கு எதிராக திரும்பியவுடன் அவரை முழுமையாக அகற்றிவிட்டு ஆட்சியை தன் கையில் எடுத்து கொண்டது.

இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்க இனி இங்கிலாந்திலிருத்து தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டுவருவதை தவிர்க்க தொடங்கியது. தனக்கு தேவையான பணத்தை அநியாய வரி மூலம் இந்தியர்களிடமிருந்தே பெற்று கொண்டு அந்த பணத்தில் இந்திய பொருட்களை வாங்கி அதை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியது.மேலும் இந்தியாவிலிருந்து வரியாக பெற்ற பணத்தின் ஒரு பங்கையும் இங்கிலாந்து அரசுக்கு கொடுத்து இந்தியாவின் மீதான தன் கட்டுபாட்டையும், வியாபார தனி அதிகாரத்தையும் தன்னிடமே வைத்து கொள்ள தொடங்கியது.இதன் விளைவு இந்திய செல்வங்களை கி.இ.கம்பெனி அட்டையாக உரிய தொடங்கியது.இந்திய பொருட்களுக்கு இங்கிலாந்திலிருந்து பணம் செலவு செய்யாமலேயே ஒரு பக்க வர்த்தகமாக இந்திய்-இங்கிலாந்து வர்த்தகம் மாறியது.


முகலாயர்கள் காலத்தில் ஜமீந்தார்கள் என்போர் விவசாயிகளிடம் வரி வசூலித்து அரசுக்கு கொடுக்கும் பணியாளர்களாக இருத்தார்கள். ஆனால் கி.இ.கம்பெனியோ இந்திய நிலங்களை ஜமீந்தார்களிடம் ஏலம் விட தொடங்கியது. யார் அதிக வரி தருகிறார்களோ அவர்களுக்கே நிலம் சொந்தம் என அறிவித்தது. நிலம் ஏலத்தில் விடுவதால் ஏல தொகை அதிகமானது. அதன் விளைவு கம்பெனிக்கு லாபமும்,விவசாயிகளுக்கு கடுமையான இழப்பும் ஏற்பட்டது. ஜமீந்தார்கள் கடுமையான முறைகளை பின் பற்றி விவசாயிகளிடம் பணம் வசூல் செய்தனர். அவர்களால் பணம் வசூல் செய்ய முடியவில்லை என்றால் நிலம் அவர்களிடமிருத்து பிடுங்க பட்டு மீண்டும் ஏலம் விட படும். இதன் முக்கிய விளைவு என்ன என்றால் நிலத்தின் உரியாளர்களான ஏழை விவசாயிகளிடமிருந்து நிலத்தின் உரிமை பிடுங்க பட்டு ஜமீந்தார்கள் கைக்கு போனது. உண்மையான நில உரிமையாளர்கள் குத்தகைதாரர்களாக்க பட்டனர்.இம்முறைக்கு ஜமீந்தாரி முறை என்று பெயர்.ஜமீந்தாரி முறையினால் சுமார் 2 கோடி விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்றும் இன்னும் முறையாக நில் சீர்திருத்தம் நடை பெறாததால் இழந்த நிலங்களை இன்னும் அவர்கள் பெற வில்லை. அதன் விளைவை தான் நாம் தற்போது மாவோயிஸ்ட் இயக்கமாக வட மற்றும் வட கிழக்கு இந்தியாவில் பார்க்கிறோம்.


தென்னிந்திய பகுதியில் கி.இ.கம்பெனி ரியோத்வாரி முறை என்னும் முறையை அமுல் படுத்தியது. இதன் படி நிலத்தின் உரிமை விவசாயிகளிடமே இருக்கும். அவர்கள் நேரிடையாக வரியை அரசிடம் கொடுக்க வேண்டும். அவர்களால் வரியை கொடுக்க முடியவில்லை என்றால் நிலம் பிறறிடம் கொடுக்கபடும். இது ஒருவகையில் ஜமீந்தாரி முறையை விட நல்ல முறையாக இருந்தாலும் சிறு விவசாயிகள் , ஒரு சில வருடங்கள் பருவ மழை பொய்ப்பின் காரணமாக வரி கட்ட முடியவில்லை என்றால் அவர்கள் நிலத்தை இழக்கும் அபாயம் இருந்தது.

அதிக வரியை கொடுக்க வேண்டி இருந்ததால் விவசாயிகள் உணவு பயிரிலிருத்து பணபயிர்களுக்கு(பருத்தி) மாற நிர்பந்திக்க பட்டனர்.மேலும் முகலாயர் ஆட்சியில் பஞ்சம் ஏற்பட்டால் மன்னர் அவ்வப்போது வரி விலக்கு அளிப்பது வழக்கம். ஆனால் கி.இ.கம்பெனியினருக்கோ லாபம் ஒன்றே குறிக்கோள். எனவே எப்படி பட்ட பஞ்சம் வந்தாலும் அவர்களுக்கு பணம் வந்து சேர வேண்டும் அதன் விளைவு வங்காலத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு சுமார் 1 கோடி மக்கள் இறந்தனர்

முன் பதிவில் கூறியது போல் நெசவாளர்களும் துன்புறுத்தபட்டு குறைந்த லாபத்தில் அனைத்து துணிகளையும் கி.இ.கம்பெனிக்கு விற்க வற்பறுத்தபட்டார்கள். இதன் மூலம் குறைந்த விலையில் துணிகளை வாங்கி இங்கிலாந்தில் நிறைந்த விலைக்கு விற்றும் கம்பெனி நல்ல காசு பார்த்தது.

இவ்வாறாக இந்தியாவிலிருந்து கி.இ.கம்பெனியால் சுரண்டபட்ட செல்வத்தின் மதிப்பு வருடத்திற்கு 2 மில்லியனை தாண்டும் என கணக்கிடபட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி என்ன என்றால், இந்த பணம் தான் இங்கிலாந்தின் தொழில் புரட்சி நடப்பதற்கு தேவையான மூலதனமாக இருந்தது.தொழிற்புரட்சிக்கு தேவையான இயந்திரங்களை உருவாக்க 0.6 - 2 மில்லியன் பவுண்டுகள் தான் இங்கிலாந்திற்கு தேவை பட்டது என்பது குறிப்பிடதக்கது.

இங்கிலாந்தில் தொழிற்புரட்சி முழுமையாக வளர்ச்சி பெற்ற பின் இந்திய - இங்கிலாந்தின் வணிக போக்கு வேறு மாதிரி திரும்ப தொடங்கியது. இங்கிலாந்து தொழிற் சாலைகளுக்கு தேவையான மூல பொருட்களை(பருத்தி, இரும்பு போன்றவை) குறைந்த விலைக்கு இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்தது கி.இ.கம்பெனி. அந்த மூல பொருட்களை கொண்டு மதிப்பு கூடிய பொருட்களை இங்கிலாந்தில் உற்பத்தி செய்து அதை மிக அதிக விலைக்கு இந்தியாவில் இறக்குமதி செய்தது. அதன் விளைவு, இந்திய செல்வங்கள் பெருமளவு இங்கிலாந்து நோக்கி செல்ல ஆரம்பித்தது.

அடுத்த பதிவில் கி.இ.கம்பெனி இங்கிலாந்தில் செயல் பட்ட விதம் மற்றும் அதற்கும் இங்கிலாந்து அரசுக்குமான உறவு பற்றி பார்ப்போம்.

--

Saturday, August 07, 2010

மாபெரும் வீட்டு கடன் தள்ளுபடி- அமெரிக்காவில் உலவும் வதந்தி

தற்போது அமெரிக்க அரசு மற்றும் நிதி நிறுவனக்களில் அதிகாரத்தில் இருப்போர் மற்றும் விவரமறிந்தோர் மத்தியில் ஒரு பெரும் வதந்தி உலவி வருகிறது. அது தான் அமெரிக்க அரசு செய்ய போகும் வீட்டு கடன் தள்ளுபடி பற்றியது, கடந்த ஒரு வருடமாக என்ன ஸ்டிமுலஸ்(stimulus-- ஊக்கம்?) கொடுத்தாலும் அமெரிககாவின் பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சியை காட்டமுடியவில்லை. தற்போது முக்கியமான இடைக்கால தேர்தல் வேறு வர போகிறது. ஆனால் ஒபாமாவின் செல்வாக்கு தற்போது சிறிது சிறிதாக சரிந்து வருகிறது. எனவே எதாவது செய்து மக்களின் ஆதரவை பெர வேண்டிய நிலைக்கு ஒபாமா தள்ளபட்டுள்ளார்.

இதற்கு அவர் எடுக்கும் பிரம்மாஸ்த்திரம் தான் கடன் தள்ளுபடி என்று வதந்தி மிக வேகமாக பரவி விடுகிறது. அமெரிக்க பொருளாதாரம் மிக சூடாக இருந்த போது(2004 - 2008) வீடுகளின் மதிப்பு மிக வேகமாக உயர்ந்தது. சமீபத்திய பொருளாதார நெருக்கடி சமயத்தில் அதன் மதிப்பு மிக வேகமாக குறைய ஆரம்பித்தது. அதனால் வீடு வாங்கியவர்கள் தங்களின் வீட்டின் தற்போதைய மதிப்பை விட அதிக அளவு கடனை திருப்பி செலுத்த வேண்டி உள்ளது. ஒபாமாவின் புதிய திட்டத்தின் படி அவர்கள் வீடு வாங்கிய போது இருந்த விலைக்கும் அதன் தற்போதைய மதிப்பிற்கும் இடை பட்ட பணத்தை தள்ளுபடி செய்ய உள்ளதாக தெரிகிறது. அதாவது ஒருவர் 2007ல் $700000 க்கு வீடு வாங்கி உள்ளார் என்று வைத்து கொள்வோம். தன் தற்போதைய மதிப்பு $400000 என்றால் $300000 தள்ளுபடி செய்ய பட்டு விடும். அதற்கான $500 பில்லியனுக்கும் மேலான பணத்தை அரசு கொடுத்து விடும்.இந்த வதந்தி உண்மையானால் அது இடை தேர்தல்களின் முடிவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடிய வாய்ப்பு உள்ளது.

அட இங்கியும் நம்ப ஊர் அரசியல் தான்!

இது ஒரு வதந்தி தான்.எந்த அளவு உண்மையான செய்தி என்று தெரியவில்லை.

முன்பு ஆசிய நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, உலக வங்கி மற்றும் IMF மூலம் அரசு மக்கள் நல திட்டங்களுக்கும், வளர்ச்சிக்கும் செய்யும் செலவை குறைத்தால் தான் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சரியாகும் என்று போதனை செய்தது.Structural Adjustment என்று புதிய நடைமுறைகளை திணித்தது.( அதை நடை முறை செய்ய முயன்ற சந்திர பாபு நாயுடு மற்றும் ஜெயலலிதாவுக்கு நடந்தது நாடறியும்). அதே பிரச்சனை மேலை நாடுகளுக்கு சென்ற ஆண்டு வந்த போது Structural Adjustment பற்றி ஒன்றுமே பேசாமல் பல டிரில்லியன் டாலர்களை Stimulus ஆக அள்ளி வீசியது.

விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை வெளி நாட்டில் படித்து இங்கு பீட்டர் விட்டு கொண்டிருக்கும் பொருளாதாரவாதிகள் மேலை நாடுகளை எடுத்து காட்டாக காட்டி அவ்வகை திட்டங்களை எள்ளி நகையாடி கொண்டிருந்தினர். தற்போது மேலை நாடுகளில் பிரச்சனை என்று வந்தவுடன் இந்தியாவை விட பல மடங்கு பணத்தை Tax Credit,Stimulus,தள்ளுபடி என்று அள்ளி வீசி கொண்டு ஊள்ளார்கள்.

தலை வலியும் பல் வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்

--

Monday, August 02, 2010

கிழக்கிந்திய கம்பெனி 4 - இந்தியாவின் நெசவு தொழில் - வளர்ச்சியும் வீழ்ச்சியும்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்


கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றம்,ஆரம்ப கால வளர்ச்சி மற்றும் தேயிலை தொடர்பு பற்றியும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அது இந்திய தொழில் துறையை எப்படி நசித்தது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.கி.இ.கம்பெனி வியாபாரத்தை மட்டும் நடத்திய வரை அது ஒரளவுக்கு இந்தியாவிற்கு நல்லதாகத்தான் இருந்தது.அவுரங்கசீப்பின் கடைசி காலத்திலிருந்து முகலாய பேரரசு பலமிழக்க தொடங்கியது. அவரின் மறைவிற்கு பிறகு முகலாய பேரரசு இந்தியாவின் மீது இருந்த தன் கட்டுபாட்டை இழக்க தொடங்கியது. அந்த காலத்தில் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்து இந்தியாவை வெற்றி கொண்டதோடு இல்லாமல் டெல்லியில் ஒரு ரத்த ஆறையே ஓட விட்டு சென்றான். இது முகலாய பேரரசை மேலும் பலவீனபடுத்தியது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் பிரான்சு கிழக்கிந்திய கம்பெனிகள் இந்தியாவின் தெற்கு பகுதி மற்றும் பிற பகுதிகளை சிறிது சிறிதாக தன் ஆதிக்கத்தில் எடுத்து வர ஆரம்பித்தார்கள்.பல்வேறு மகாணங்களை வென்று அல்லது அங்கு தனது அதரளாவர்களை பொம்மை அரசாக வைத்து தன் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். பிளாசி போரின் வெற்றிக்கு பிறகு பிரன்ச்சு ஆதிக்கம் சிறிது சிறிதாக குறைந்து இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் விரிய தொடங்கியது.இந்த கால கட்டத்தில் இந்தியாவின் நெசவு தொழில் எவ்வாறு வளர்ச்சி அடைந்து வீழ்ச்சி அடைந்தது என்று பார்ப்போம்.

நெசவு தொழில் முதலீடு - இங்கிலாந்து,இந்தியா - இரு வேறு முறைகள்

முன் பதிவில் கூறியது போல் கி.இ.கம்பெனியின் ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து, அய்ரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு துணிகளை அதிக அளவு ஏற்றுமதி செய்தது. அதன் விளைவாக இந்தியாவில் நெசவு தொழிலின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தது.இந்த வளர்ச்சி இந்தியாவில் பிற தொழிலில் இருப்பவர்கள் பலரை நெசவு தொழில் நோக்கி கொண்டு வந்தது. இதில் முக்கியமாக கவனிக்க பட வேண்டியது நெசவு தொழில் வளர்ச்சி நவீன தொழில்நுட்பம் மூலம் வளர்ச்சி அடைய வில்லை.இதன் வளர்ச்சி இந்தியாவில் அதிக மக்களை இழுப்பதன் மூலம் வளர்ந்தது. புதியவர்கள் நெசவு தொழிலில் இறங்கும் போது முதலீடு தேவை பட்டது. நெசவு தொழிலாளர்களுக்கு டாட்னி எனப்படும் முறைப்படி கடன் கொடுக்க பட்டது.முதலீட்டாளர்கள் பணத்தை நெசவு தொழிலாளிகளிடம் முதலீடாக கொடுப்பர்.உற்பத்தி செய்யும் துணிகளை முதலீட்டாளர்களிடம் முன்பே நிர்ணயிக்கபட்ட விலையில் விற்க வேண்டும். இங்கிலாந்தில் அதே கால கட்டத்தில் புட்டிங் அவுட் முறையில் கடன் கொடுக்க பட்டது. அதன் படி வியாபாரி உற்பத்தியாளரிடம் பருத்தி போன்ற மூல தனங்களை கொடுத்து உற்பத்தி செய்ய சொல்வார்கள். உற்பத்தியாளர்கள் துணியாக நெய்த பின் அதை வந்து வாங்கி கொள்வார்கள். இந்திய வியாபாரிகளோ பருத்தி வாங்குவது, எவ்வாறு உற்பத்தி செய்பது போன்ற முடிவுகளை உற்பத்தியாளர்களிடமே விட்டு விடுவார்கள்.இங்கிலாந்தில் மேற் கூறிய படி தொடங்கிய நெசவு தொழில் நாளாக நாளாக வேறு வடிவம் எடுக்க தொடங்கியது. வியாபாரிகள் ஒவ்வொரு உற்பத்தியாளரையும் பார்த்து மூலப்பொருட்களை கொடுத்து, உற்பத்தியை கண்காணித்து, துணியை வாங்குவதை விட, அனைத்து உற்பத்தியாளரையும் ஒரே இடத்துக்கு வர செய்து அங்கு அவர்களுக்கு மூல பொருட்களை கொடுத்து அங்கேயே துணியை நெய்ய வைத்து அவர்களிடம் நெய்ய பட்ட துணிகளை வாங்க தொடங்கினர். இது பிற்காலத்தில் தொழிற்கூட முறையில் (Industrial Production) உற்பத்தியை தொடங்க முன் மாதிரியாக இருந்தது .அதே நேரத்தில் அப்போது இங்கிலாந்தில் ஏற்பட்ட பருத்தி தட்டு பாடும்,இவ்வகை தொழிற்கூட முறை துணி உற்பத்தியும் இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட ஒரு காரணியாக இருந்தது எனலாம்.

கிழக்கிந்திய கம்பெனி போட்டியாளர்களை விட அதிக துணிகளை வாங்க இந்த டாட்னி முறையை உபயோக படுத்த தொடங்கியது. கி.இ.கம்பெனி டாட்னி கடன்களை கொடுத்து நெசவாளர்களை தங்கள் பக்கம் இழுத்தது .நெசவாளர்களிடம் இருத்து பல முறை துணிகளை வாங்க முடியாமல் இம்முறை பல தடவை கடை பிடிக்க படுவதும், விட்டு விடுவதாகுமாக இருந்தது.

கி.இ.கம்பெனியின் கட்டுபாட்டில் இந்திய நெசவாளர்கள்

கி.இ.கம்பெனி வியாபாரம் மட்டும் செய்து வந்த வரை இந்திய நெசவு தொழிலாளர்கள் நல்ல லாபமடைந்தனர். ஆனால் கி.இ.கம்பெனியினரிடம் அரசியல் அதிகாரம் கிடைக்க ஆரம்பித்தவுடன் நிலமை மாற தொடங்கியது.டாட்னி முறை வணிகம் மாறி, கம்பெனி படித்த இந்திய உயர் சாதியினரை குமாஸ்தாக்களாக பணியில் அமர்த்தி அவர்கள் மூலம் கடன் கொடுத்து நெசவாளர்களை கண்காணிக்க செய்து துணிகளை வாங்க ஆரம்பித்தது. நெசவாளர்களும் கி.இ.கம்பெனிக்கு மட்டும் துணிகளை நெய்து கொடுக்க கட்டாயபடுத்த பட்டனர். மறுத்தவர்கள் துன்புறுத்தபட்டார்கள். கி.இ.கம்பெனியினர் நிர்ணயித்த விலையிலேயே துணிகளை விற்க கட்டாய படுத்தபட்டார்கள்.இதன் விளைவி கி.இ.கம்பெனிக்கு இந்திய துணி ஏற்றுமதி மிக பெரிய லாபத்தை கொடுத்தது. இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும் துணிகளை பிற ஐரோப்பிய நாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்து மிக பெரிய பணம் பார்த்தனர் கி.இ.கம்பெனி. இவ்வகை துணி வர்த்தகத்தில்,கம்பெனிக்கு முதலீட்டை விட மும்மடங்கு லாபம் கிடைத்தது.

இங்கிலாந்து நெசவாளர்கள் லாபி

இங்கிலாந்தில் இந்திய துணிகள் கடல் போல் பரவ தொடங்கியதால் இங்கிலாந்து நெசவு தொழில் பாதிக்க பட தொடங்கியது.இங்கிலாந்து நெசவு தொழிலாளர்கள் லாபி இதை தடுக்க மிக வேகமாக செயல்பட்டது. அவர்களின் வற்புறுத்தளால் 1685ம் ஆண்டு இந்திய துணிகளுக்கு 10 சதம் சுங்க வரி விதித்தது. 5 ஆண்டுகளில் அது 10 சதமாக உயர்த்தபட்டது.1719 ம் ஆண்டு இந்திய துணிகளை அணிபவர்களுக்கு 5 பவுண்டும் விற்பவர்களுக்கு 20 பவுண்டும் அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது.1813ம் ஆண்டு சுங்க வரி 85% அளவுக்கு உயர்த்த பட்டது.

இங்கிலாந்தில் ஒரு புரட்சி



அப்போது இங்கிலாந்தில் நடந்த ஒரு புரட்சி உலக பொருளாதாரம் மற்றும் வாணிபத்தின் போக்கையே மாற்ற தொடங்கியது. அந்த புரட்சி கத்தியின்றி ரத்தமின்ற நடந்தது. அது ஒரு அரசியல் புரட்சி அல்ல. அது ஒரு அறிவியல் புரட்சி அது தான் தொழிற்புரட்சி. உற்பத்திக்கு மனிதர்களை மட்டும் நம்பி கொண்டிருந்த நிலையை மாற்றி இயந்திரங்களை கொண்டு உற்பத்தியை தொடங்க ஆரம்பித்தனர். Production by mass என்ற நிலையை மாற்றி mass production என்ற சிந்தனைக்கு உலகை கொண்டு சென்றது.சாமுவேல் கிராம்டன் 1779ம் ஆண்டு கண்டு பிடித்த நெசவு இயந்திரம் தொழில் புரட்சிக்கு வித்திட்டது..

இந்திய நெசவு தொழிலின் வீழ்ச்சி

இந்திய நெசவு தொழிலின் அழிவுக்கு இங்கிலாந்து தொழிற்புரட்சி தான் காரணம் என்பது பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் உண்மையில் இந்திய துணிகளின் தரத்திற்கு இணையாக இங்கிலாந்து தொழிற்சாலைகளில் நெய்ய பட்ட துணிகள் போட்டி போட முடியவில்லை.தொழிற்புரட்சி ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், அதாவது 1815ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய பட்ட நெசவு பொருட்களின் மதிப்பு 1.3 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. அதே நேரம் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய பட்ட நெசவு பொருட்களின் மதிப்பு 26000 பவுண்டுதான் இருந்தது. இதிலிருந்து இங்கிலாந்து தொழிற்புரட்சியால் இந்தியாவின் நெசவு தொழிலை நேர்மையான வாணிபத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று தெரிகிறது.

அதன் பிறகு இந்தியாவின் நெசவு தொழில் மிக வேகமாக அழிய தொடங்கியது.1832 ம் ஆண்டு முதல் இந்தியா இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்த நெசவு பொருட்களை விட, இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்த நெசவு பொருட்களின் மதிப்பு அதிகமாக தொடங்கியது.இந்தியாவின் நெசவு தொழிலின் வீழ்ச்சிக்கு பல காரணங்களை கூறலாம்.. முதலாவதாக இங்கிலாந்து தொடர்ச்சியாக இந்திய தூணிகளுக்கு விதித்த சுங்க வரையை தொடர்ச்சியாக அதிகரித்ததை கூறலாம். அடுத்ததாக நெப்போலியன் கால பிரான்ஸுக்கு எதிரான போரின் காரணமாக இங்கிலாந்தில் இருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பட்ட துணிகளை தடை செய்தது.இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய பட்ட துணிகளில் பாதிக்கு மேல் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பட்டது. ஆனால் பிரான்சுக்கு எதிரான போரின் போது, இங்கிலாந்து இவ்வகை ஏற்றுமதிக்கு தடை செய்தது. இதனால் இந்திய நெசவு வணிபம் பெரிதும் பாதிக்க பட்டது. கிழக்கிந்தய கம்பெனி அரசியல் அதிகாரம் பெரும் வரை,விவசாயிகளிடமிருந்து அரசு பெற்ற வரியின் மூலம் பெருமளவு நகர் புற வசதி படைத்தவர்களின் எண்ணிக்கையும் மற்றும் ஆட்சியாளார்களின் செலவினங்களும் அதிகரித்திருந்தது, அதனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அதிக நெசவு தொழில் வளர்ச்சி தேவை பட்டது, ஆனால் கி,இ.கம்பெனி வரி வசூல் செய்ய அரம்பித்தவுடன் அந்த செல்வங்கள் இங்கிலாந்து நோக்கி செல்ல தொடங்கிஅதால் இந்திய நகர் புர வர்க்கத்தின் எண்ணிக்கையும் குறைந்தது, இதன் விளைவாக நெசவு பொருட்களுக்கு உள்நாட்டு தேவையும் குறைய ஆரம்பித்தது.ஆரம்ப காலங்களில் கி.இ.கம்பெனிக்கு இங்கிலாந்து அரசின் மீது அதிக தாக்கம் (influence) இருந்தது. அப்போது அதன் லாபத்திற்காக இந்திய துணிகளை இங்கிலாந்தில் விற்பதற்கு ஏற்ற சூழ்நிலையை அரசின் மீது முடிந்த வரை அழுத்தம் கொடுத்து ஏற்படுத்தி வந்தது. ஆனால பிற்காலத்தில் அதன் தாக்கம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது. 1813ம் ஆண்டு ஆங்கில அரசின் சட்டத்தின் மூலம் அதன் அதிகாரம் பெருமளவு குறைக்க பட்டு ஆங்கில அரசுக்காக இந்தியவை ஆளும் ஒரு ஏஜென்டு மட்டும் தான் என்ற நிலைக்கு தள்ள பட்டது. ஆங்கில அரசின் கட்டுபாட்டிற்கு இந்தியா வர ஆரம்பித்தவுடன், ஆங்கில அரசு தன் நாட்டு நெசவு தொழிலை ஊக்குவிப்பதே முதல் குறிக்கோளாக கொண்டு இந்திய நெசவு தொழிலை முழுமையாக அழிக்க தொடங்கியது. கடைசியாக இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சியும் இந்திய சவு தொழிலின் அழிவுக்கு ஒரு காரணமாக இருந்தது எனலாம்.

அடுத்த பதிவில் கி.இ.கம்பெனியால் எவ்வாறு இந்திய செல்வங்கள் கொள்ளை போயின என்று பார்க்கலாம்.

--