Monday, June 21, 2010

தங்கத்தை வாங்கி குவிக்கும் சவுதி அரேபியா

1989ம் ஆண்டு உலக சேமிப்பு செல்வத்தில்(Reserve) தங்கத்தின் பங்கு 32.7 சதவிதம் இருந்தது.யூரோ அறிமுகபடுத்த பின் அய்ரோப்பிய மத்திய வங்கிகள் தங்கத்தை சிறிது சிறிதாக விற்க ஆரம்பித்தனர்.ஆசிய வங்கிகளோ அமெரிக்க கடன் பத்திரங்களை(டாலர்) அதிக அளவில் சேமிப்பு செல்வமாக வாங்கி குவிக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக தங்கத்தின் பங்கு சேமிப்பு செல்வத்தில் 10.3 சதமாக குறைந்தது.அரசாங்கங்களால் அடிக்கப்படும் பணம் மற்றும் பணம் அடிப்படையிலான செல்வங்களுக்கு மாற்றாக இருக்கும் சேமிப்பு செல்வமாக( anti dollar) தங்கத்தை கருதலாம்.சமீபத்திய நிதி நெருக்கடி காரணமாக மத்திய வங்கிகள் பண புழக்கத்தை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் கூடிய விரைவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற கணிப்பு பல பொருளாதார வல்லுனர்களிடம் உள்ளது.அதனால் பண வீக்கத்திடமிருந்த ஓரளவு பாதுகாப்பு பெற அனைவரும் தங்கத்தை நாடுவது வழக்கம்.அதன் விளைவாக தற்போது அய்ரோப்பிய மத்திய வங்கிகள் தங்கத்தை விற்கும் வேகத்தை சிறிதளவு குறைத்துள்ளனர்.

தற்போது ஆசிய மற்றும் பிற வளரும் நாடுகளின் வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளனர்.இந்தியா 200 டன் தங்கத்தை சர்வ தேசிய நிதி நிறுவனத்திடமிருந்து வாங்கியது.ஆனால் சீனாவோ கடந்த 6 ஆண்டுகளில் கமுக்கமாக தன் தங்க கையிருப்பை இரு மடங்காக்கி விட்டது. சீனா மறைமுகமாக அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவிப்பதாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது.இந்தியா சீனா மட்டுமின்றி ரஸ்யா,வெனிசூலா,மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளனர்.இந்தியா சீனா போன்ற நாடுகள் தங்கத்தை அதிக அளவு வாங்கினாலும் தங்களது சேமிப்பு செல்வத்தில் தங்கத்தின் பங்கு 2 - 6 சதவிதம் மட்டுமே உள்ளது.ஆனால் அமெரிக்காவிடம் உலக சேமிப்பு செல்வத்தில் உள்ள தங்கத்தில் 77 சதவிதம் உள்ளது குறிப்பிட தக்கது.

இந்த வரிசையில் வெளி வந்துள்ள சமீபத்திய செய்தி சவுதி அரேபியா பற்றியது. சவுதி அரேபியாவின் தங்க கையிருப்பு 322.9 டன்கள் என்று தெரிய வந்துள்ளது. இது சவுதி அரேபியா வைத்திருந்ததாக கருதபட்ட தங்கத்தின் அளவை விட ( 143 டன்கள் ) இரு மடங்கிற்கும் அதிகமானது ஆகும்.சமீப காலமாக வளைகுடா நாடுகள் இணைந்து பொது நாணயத்தை வெளியிட முயற்சி செய்தனர். இந்த வருடம் அந்த நாணயம் வந்து இருக்க வேண்டும். யூரோ பிரச்சனையினாலும் பிற காரணங்களினாலும் அது மேலும் 5 ஆண்டுகளுக்கு தள்ளி போய் உள்ளது. அந்த பொது நாணயம் தங்க கையிருப்பை கொண்டு, தங்க மாற்று நாணயமாக இருக்கலாம் என்ற வதந்தி உளவி வந்தது.அந்த வதந்திக்கும் இந்த செய்திக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சீனா மிக அதிக அளவு தங்கத்தை வாங்கினால் தங்கத்தின் விலை அதிகம் உயர்ந்து, அதற்கு மாற்றான அமெரிக்க டாலரின் மதிப்பு ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.சீனாவின் சேமிப்பு பெருமளவு டாலராக இருப்பதால்,இது சீனாவுக்கு பெரிய பாதிப்பாக அமைய வாய்ப்புள்ளது. உலகில் அதிகமாக உபரி பணம் வைத்துள்ள சீனா இதனால் அதிக அளவு தங்கத்தை குறைந்த கால இடைவெளியில் வாங்குமா என்பதும் சந்தேகமே.மேலை நாடுகளின் தங்க கையிருப்பு குறைந்து வருவதால் அந்நாடுகள் மரபு சாரா முறைகளில் எதாவது உத்தியை கொண்டு தங்கத்தின் விலை ஏற்றத்தை கட்டு படுத்த வாய்ப்பு எப்போதும் உள்ளது!

--

2 comments:

கணநாதன் said...

தங்கம் பற்றிய உங்களது செய்தி எனக்கு பேருதவியாக இருந்தது மிக்க நன்றி

Kannan said...

மிகவும் அருமை